மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஆண்டு முழுவதும் பெய்யும் மழையில் 8 விழுக்காடு மட்டுமே சேமிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
2ஆவது முறையாக பிரதமரான பின் முதல்முறையாக மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் நரேந்திரமோடி இன்று உரையாற்றினார். அதில் பேசிய அவர், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 61 கோடி பேர் ஜனநாயக கடமையாற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
உலகில் வேறெங்கும் நடக்காத மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் என்றும் கூறிய அவர், அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை நிலவுவதாகக் கூறிய மோடி, மழைப் பொழிவில் 8 விழுக்காடு மட்டுமே சேமிக்கப்படுவதாக வேதனையுடன் குறிப்பிட்டார். தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான விரைவான முடிவுகளை எடுப்பதற்காக ஜல சக்தி என்ற அமைச்சகம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
வேலூரில் 20 ஆயிரம் பெண்கள் இணைந்து நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் நாக நதியை மீட்டெடுத்ததை கேள்விப்பட்டதாகவும், இது சிறப்பான பணி என்றும் மோடி பாராட்டினார். தண்ணீர் சேமிப்பு தொடர்பாக 3 கோரிக்கைகளை நாட்டு மக்களிடம் பிரதமர் முன் வைத்துள்ளார்.
முதலாவதாக தண்ணீர் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாரம்பரிய சேமிப்பு முறைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மோடி கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் சேமிப்பு தொடர்பான தனிநபர் அல்லது தொண்டு நிறுவனங்களின் பணிகள் குறித்த தகவல்களை பகிர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மோடி வலியுறுத்தி உள்ளார்.
