சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் இன்றைய பெரும் கவலையே, பிளாஸ்டிக்கை எப்படித்தான் ஒழிப்பது என்பதுதான்!
குறிப்பாக, கடல்களில் மிதக்கும் டன் கணக்கிலான பிளாஸ்டிக் பொருட்கள் அங்கிருக்கும் உயிரினங்களுக்கும் செடி-கொடிகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளன. ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களைத் தின்று இறப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த பிளாஸ்டிக்குகளும் அவ்வளவு எளிதில் மண்ணிலோ நீரிலோ மட்கிப் போவதில்லை. ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளும் மட்கிப் போய் அழிவதற்கு சில பத்தாண்டுகளோ, ஏன், சில நூற்றாண்டுகளோ கூட ஆகலாம்.
இதனால், பிளாஸ்டிக்கை எப்படி ஒழிப்பது என சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் குழம்பித் தவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான், இஸ்ரேலைச் சேர்ந்த ஷரோன் பரக் என்ற பெண் வேதியியல் பொறியாளர் ஒரு அருமையான மாற்று பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்துள்ளார்.
ஏராளமான வேதிப் பொருட்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து இந்த பிளாஸ்டிக்கை அவர் கண்டுபிடித்தார்.
இந்த பிளாஸ்டிக்கை வெகு எளிதாக மட்கிப் போகச் செய்யலாம் என்பதே அதன் சிறப்பு. இந்த ‘போலி’ பிளாஸ்டிக்கினாலான பொருட்களைப் பயன்படுத்தி முடித்துவிட்டு தூக்கி எறிந்தால் அவை விரைவிலேயே மட்கிவிடும் தன்மை கொண்டவையாக உள்ளன.
குறிப்பாக, இந்த பிளாஸ்டிக் பொருட்களை கடல் நீரில் எறிந்தால் கூட, அடுத்த சில நிமிடங்களிலேயே அவை நீரில் கரைந்து விடும்.
எனவே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இந்த ‘போலி’ பிளாஸ்டிக் ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக்கைத் தயாரிப்பதும் ஒரு பெரிய விஷயமல்ல என்று ஷரோன் கூறுகிறார். ஏற்கனவே பிளாஸ்டிக் தயாரிப்பிற்குப் பயன்படும் எந்திரங்களில் சில மாறுபாடுகளைச் செய்தாலே போதும் என்கிறார் அவர்.
