நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் படகை விட்டு மோதியதில் தமிழக மீனவர்களின் படகு சேதம் அடைந்தது. மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இரு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 600க்கும் அதிகமான விசைப்படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அந்த இரு துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 160 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
கார்த்திக், குட்டியாண்டி, ராசு, மனோகர், ஆனந்த் ஆகிய 5 பேர் ஒரு படகில் நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தங்கள் படகை வைத்து மீனவர்களின் படகு மீது மோதினர்.
இதில் மீனவர்களின் படகின் முகப்பு பலத்த சேதம் அடைந்தது. மேலும் மரச்சட்டத்தை வைத்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். மீன்களைப் பிடிக்கச் சென்றவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஜெகதாப்பட்டினம் வந்து சேர்ந்தனர்.
அவர்களை மீட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும், கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளும், மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து சில நாட்களில், நடந்த இந்தத் தாக்குதல் தங்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
