தமிழக முன்னாள் டிஜிபி வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார்.
மறைந்த, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோதரர் வி.ஆர்.லட்சுமி நாராயணன். இவர் 1951ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் இணைந்து பணியாற்றியவர். தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளில் இருந்த இவர், தமிழக காவல்துறையின் சட்ட ஒழுங்கு டிஜிபியாகவும் பணியாற்றி உள்ளார்.
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது, சிபிஐ இணை இயக்குநராக வி ஆர் லட்சுமி நாராயணன் பணியாற்றினார். அப்போது நெருக்கடி நிலை தொடர்பான வழக்கில் இந்திரா காந்தி கைது செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது வி.ஆர்.லட்சுமி நாராயணன் தான் இந்திரா காந்தியை கைது செய்தார்.
பின்னர் 1985ல் ஓய்வு பெற்ற இவர், சென்னை அடையாறில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் 91 வயதில், வயது முதிர்வின் காரணமாக வி.ஆர்.லட்சுமி நாராயணன் இன்று காலமானார்.
