காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் தங்கத்தில் முறைகேடு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் குருக்கள் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதில் பெரும் அளவு தங்கம் முறைகேடு நடந்து இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் வழக்கு தொடர்ந்து பலரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கோவிலில் பணிபுரிந்த முன்னாள் குருக்களான ராஜப்பா குருக்களும் இது சம்மந்தமாக தேடப்பட்டு வந்தார். இவர் வெளிநாட்டில் இருப்பதாக காவல் துறையினருக்கு தெரிய வந்ததை அடுத்து இந்தியாவுக்குள் வந்தால் இவரை கைது செய்யும்படி இமிகிரேஷன் அலுவலர்களுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று கனடாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய ராஜப்பா குருக்களை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவ ராமானுஜன் இல்லத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ராஜப்பா குருக்களை வருகிற 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
