மேட்டூரில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை வழியாக அரக்கோணம் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி நீரை சென்னைக்கு ரயிலில் எடுத்துச் சென்று விநியோகிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மெட்ரோவாட்டர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டனர்.
சாலை மார்க்கமாக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் மைக்க வேண்டியுள்ளதால் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
மேட்டு சக்கர குப்பம் கிராமத்தில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி நிரம்ப சராசரியாக 3 நட்கள் ஆவதாக கூறப்படுகிறது. சென்னைக்கு ஒரு கோடி லிட்டரை 4 தவணைகளாக கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக் கூறப்படும் நிலையில், தொட்டிகளில் தண்ணீர் நிரம்ப ஆகும் நாட்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், 2027ம் ஆண்டு வரை ஜோலார்பேட்டை பகுதி மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது எனவும், 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு உள்ளதால் இன்னும் 9 ஆண்டுகள் வரை அந்த தண்ணீரை பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்படி பயன்படுத்தினாலும் மேலும் 54 மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளதால், சென்னைக்கு எடுத்து செல்வதால் ஜோலார்பேட்டை மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏதும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
