துளசி கப்பார்ட் 2020ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தான் போட்டியிடவிருப்பதாக கூறியுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த முதல் அமெரிக்க அதிபராக ஆக வேண்டும் என்பது அவர் லட்சியம்.
இவர் நான்கு முறை ஹாவாயிலிருந்து ஜனநாயக கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 37 வயதான கப்பார்ட், ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் முதல் இந்து அதிபராகவும், முதல் இளம் மற்றும் பெண் அதிபராகவும் இருப்பார்.
இவருக்கு அரசியல் குடும்ப தொழில் எனக் கூறலாம். இவரின் தாயார் கேரெல் கப்பார்ட் ஹாவாய் மாநில கல்வித்துறையில் முக்கிய உறுப்பினராக இருந்தார். தந்தை ஒரு அரசியல் ஆர்வலாராகவும், ஹாவாய் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும் குழுவில் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.
துளசி கப்பார்ட் பட்லர் இயக்கத்தில் வளர்ந்தார். ஆதலால் , இவரது அரசியல் பயண துவக்க காலத்தில் இவர் பட்லர் மற்றும் அவரது தந்தையின் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டார். 2013ம் ஆண்டும் பகவத் கீதை சாட்சியாக இவர் பதவியேற்றார்.
இவர் கிருஷ்ண பக்தர் என்பதும், வைணவத்தை பின்பற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தான் ஒரு ஹிந்து என்ற அடையாளத்தை பெருமிதமாக கூறிக்கொள்பவர். இவர் இந்தியர் இல்லை என்றாலும் தனது இளமை பருவத்திலே ஹிந்துத்துவத்தை தேர்ந்தெடுத்தார்.
2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக ஜனவரி 12ம் தேதி அறிவித்துள்ளார்.
