காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை இரண்டாவது நாளாக திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரதரை தரிசித்தனர். இரண்டாவது நாளான இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம் நடைமுறையில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக மினி பேருந்துகள் இயக்கப்படுவதுடன், அன்னதான வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை ஏற்றிச் செல்ல பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. சுகாதாரத்துறை சார்பில் ஐந்து இடங்களில் மருத்துவ சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
