மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த வாரத்தில், கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், தற்போது, 36 மணி நேரத்தை கடந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மும்பை, புனே, நாசிக் உட்பட மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், கனமழையை எதிர்க்கொண்டிருக்கின்றன. மும்பை பெருநகரில், நேற்று மாலையில் தொடங்கிய கனமழை, விடிய, விடிய கொட்டித் தீர்த்ததால், நகரின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரில் மிதக்கின்றன…
பலத்த மழையால், மும்பையில், சியோன், கோரேகோன், கண்டவாலி, கல்யாண், தாஹிசர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள தெருக்களை சூழ்ந்திருக்கும் மழைநீரால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை காணப்படுகிறது…
மும்பை பெருநகரின் போக்குவரத்தில், மிக முக்கிய பங்கு வகிக்கும், ரயில் போக்குவரத்து, கனமழை காரணமாக முற்றாக முடங்கிப் போயுள்ளது. மும்பையின் மத்திய பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகச்சில ரயில்கள் மட்டும், அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன. கல்யாண் ரயில் நிலைய பகுதியில், தண்டவாளங்களை மறைக்கும் அளவிற்கு, மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.
விடிய, விடிய பெய்த கனமழையால், சியோன் பகுதியில் உள்ள தெருக்கள், சாலைகளை மழைநீர் தேங்கி நிற்கிறது. சாண்டா குரூஸ் பகுயில் உள்ள மிலன் சுரங்கப்பாதையை, மழைநீர் தேங்கியுள்ளது. பால்கர் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் தேங்கியதில் சாலைகள், வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. தாழ்வான பகுதிகளில், மழைநீர் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மும்பையின் நாக்பாடாவில், ஜெ.ஜெ.மருத்துவமனை பகுதியில், சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதற்கு மத்தியில், வாகன ஓட்டிகள், மிகுந்த சிரமத்துடன் தங்கள் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
மும்பையில், கடற்கரைச் சாலையொட்டியுள்ள பகுதி, மெரைன் டிரைவ் என அழைக்கப்படுகிறது. இங்கு, கடல் அலைகள் உட்புகுவதை தடுக்க தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, அரபிக் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுவதால், தடுப்புச்சுவரைத் தாண்டி, பல அடி உயரத்திற்கு பேரலைகள் எழும்புகின்றன. இதனால், கடற்கரையை ஒட்டியுள்ள, NSC போஸ் சாலை வழியே பயணிப்பதை தவிர்க்குமாறும், பேரலைகளை வேடிக்கை பார்ப்பதற்காக, மெரன் டிரைவ் பகுதிக்கு வர வேண்டாம் என்றும், மும்மை பெருநகர மாநகராட்சி கேட்டுக்கொண்டிருக்கிறது.
மும்பையில், இன்று காலை 8 மணியோடு முடிந்த 24 மணி நேரத்தில், அதிகப்பட்சமாக, சாண்டா குரூஸ் பகுதியில், 173 மில்லிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று அறிவித்திருக்கும் மும்பை வானிலை ஆய்வு மையம், பலத்த காற்று வீசும் என்றும் எச்சரித்திருக்கிறது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், அவசர தேவைகளைத் தவிர, வேறு எந்த தேவைகளுக்காகவும், வீடுகளை விட்டு, வெளியில் செல்வதை, தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியிருப்பதால், மும்பை பெருநகர மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை, மும்பை பெருநகர மாநகராட்சியும், மகாராஷ்டிரா அரசும் முடுக்கிவிட்டிருக்கின்றன. கனமழை தொடர்வதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை குழுக்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மும்பையை ஒட்டி பயணிக்கும் மித்தி ஆறு மற்றும் தானே பகுதியில் உள்ள உல்ஹாஸ் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மும்பை மண்டலத்தில், கனமழைக்கு 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால், மும்பைக்கு வரும் சில விமானங்கள், வேறுவேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன.
மேகவெடிப்பு ஏற்பட்டாற்போல், கொட்டித்தீர்த்த கனமழையால், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டம் தவித்து வருகிறது. கோதாவரி ஆறு உற்பத்தியாகும், திம்பாக் பகுதியில், பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள திம்பாக்கேஸ்வரர் திருக்கோவிலை மழைவெள்ளம் சூழ்ந்த காட்சிகள்
வெளியாகியுள்ளன.
மும்பையை போன்று, புனே நகரில், கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. முஸ்லி அணையிலிருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீரும், பாவானா அணையிலிருந்து, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த அணையில், நீர்பாசன பகுதிகளில் வசிப்பவர்கள், தாழ்வான
இடங்களில் வசிப்பவர்களுக்கு, புனே மாவட்ட நிர்வாகம், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
