இன்று ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போது, படம் பார்க்க செல்லும் கூட்டத்தைவிட அந்தப் படத்திற்கு ஆன்லைன் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வரும் கூட்டம்தான் அதிகம். இதனால், விமர்சகர்கள் டிரெண்ட் ஆகிறார்கள். அவர்களது விமர்சனங்களும் வைரலாகின்றன. ஆனால், இணையம் நம்மை ஆக்கிரமிக்கும் முன்பு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் தட்டில் சண்டே ஸ்பெஷல் சாப்பாடுடன் டிவியின் முன் அமர்ந்து இந்த வாரம் எந்தப் படத்திற்கு முதல் இடம் எனப் பார்த்துக்கொண்டிருந்தோம். இன்னும் சொல்லப்போனால், 90ஸ் கிட்ஸ்களின் ஆல் டைம் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருந்து வந்தது ‘டாப் 10 மூவீஸ்’. குறிப்பாக அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் படத்தின் விமர்சனத்தை கொடுத்த பிறகு, படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் பன்ச் விமர்சனம் ஒன்று செய்வார். அதற்கு தனி ரசிகர்கள் இருந்தனர்.
“டாப் 5 ஹீரோயின்ஸ் இவங்கதான்!” – `டாப் 10′ சுரேஷ் குமார்
ஒரே பெயர், ஒரே டைமிங், ஒரே தொகுப்பாளர் என இடைவெளியின்றி 20 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இது ஒன்றே. ஆனால், ஜூலை 7ம் தேதியோடு இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆன்லைனில் விமர்சனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். அந்த நிகழ்ச்சி நின்றதுக்கு காரணம் என்ன, ஆன்லைன் பக்கம் வந்தது ஏன் என்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், ‘டாப் 10 மூவீஸ்’ சுரேஷ் குமார்.
திடீர்னு ஆன்லைன் ப்ளாட்ஃபார்முக்கு வந்ததன் காரணம் என்ன?
‘டாப் 10 மூவீஸ்’ சுரேஷ் குமார்
“காலத்தின் கட்டாயம்னுதான் சொல்லணும். டிவி பார்க்குறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சுடுச்சு. எல்லோரும் மொபைலுக்குப் போய்ட்டாங்க. ஆன்லைன் விமர்சனம் பண்றதுக்கு நிறைய பேர் வந்துட்டாங்க. அதனால, தரமில்லாத விமர்சனங்கள் நிறைய வர ஆரம்பிச்சுடுச்சு. படத்தைப் பத்தி தவறா பேசுறாங்க, ஆபாசமா பேசுறாங்க. அதுக்கு காரணம், தரமான விமர்சகர்கள் இல்லைனு என்கிட்ட சொன்னாங்க. தவிர, சினிமாத்துறையில இருந்தும் டிவிக்கு ஆதரவு குறைஞ்சுடுச்சு. படத்துடைய க்ளிப்பிங் கொடுக்கிறதில்லை. முதல்ல நம்ம நிகழ்ச்சியில சொல்லிதான் அந்தப் படத்துக்கான புரொமோஷன் இருந்தது. இப்போ அவங்களே சமூக வலைதளங்கள் மூலமா அவங்க படத்தை புரொமோட் பண்ணிக்கிறாங்க. ‘நாங்க உங்களுக்கு படத்துடைய க்ளிப்பிங் கொடுப்போம்; ஆனால், அதை பத்தாவது இடத்துல வெப்பீங்க. அதுக்கு ஏன் நாங்க க்ளிப்பிங் கொடுக்கணும்?’னு கேட்குறாங்க. இந்தப் பிரச்னை கடந்த நாலஞ்சு வருடமா நடந்துக்கிட்டு இருந்தது. அது மட்டுமல்லாமல், ஒருதலை பட்சமா நடந்துக்கிறோம்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கத்தான் அந்த நிகழ்ச்சியை நிறுத்திட்டோம். அதனால ஆன்லைன் தளத்துல தரமான விமர்சனங்கள் கொடுக்கலாம்னு இங்கே வந்துட்டேன்.”
இத்தனை வருடமா இருந்துவந்த ‘டாப் 10 மூவீஸ்’ நிகழ்ச்சியை நிறுத்தணும்னு முடிவெடுக்க ரொம்ப யோசிச்சிருப்பீங்கதானே!
“ஆமா. நிறையவே யோசிச்சோம். காரணம், இத்தனை வருடமா ஒரே பெயர்ல, ஒரே டைமிங்ல, ஒரே ஆங்கரை வெச்சு நடந்துகிட்டு இருந்த ஒரே நிகழ்ச்சி இது மட்டும்தான். ஆனா, வேற வழி இல்லையே. ஒவ்வொரு வாரமும் பத்துப் படங்களுக்கு விமர்சனம் சொல்லணும். அதுக்கு க்ளிப்பிங் வேணும். டாப் 10 மூவீஸ்னு சொல்லிட்டு கொஞ்ச படங்களுக்கு க்ளிப்பிங் போட்டு மத்த படங்களுக்கு ரேட்டிங் மட்டும் கொடுக்கிற மாதிரி இருந்தது. அப்படி பண்ணி மக்களை ஏமாத்த எங்களுக்கு விருப்பமில்லை. சில நேரங்கள்ல இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தணுமேனு பண்ற மாதிரி எங்களுக்கே ஃபீலாச்சு. அதனால, நாங்க எல்லோரும் சேர்ந்து முடிவு பண்ணி அந்த நிகழ்ச்சியைத் தற்காலிகமா நிறுத்தலாம்னு முடிவெடுத்தோம். எதிர்காலத்துல என்ன நடக்கும்னு தெரியலை.”
நிகழ்ச்சியை நிறுத்த படத்துடைய க்ளிப்பிங் மட்டும்தான் காரணமா?
‘டாப் 10 மூவீஸ்’ சுரேஷ் குமார்
“பெரிய நடிகர்கள் எல்லாம் வருடத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறாங்க. மத்ததெல்லாம் சின்னச் சின்ன படங்கள்தான். தயாரிப்பாளர் சங்கத்திலுருந்தும் ஃப்லிம் சேம்பர்ல இருந்தும் ஆதரவு இல்லை. தவிர, ஒவ்வொரு படங்களும் தயாரிக்கும்போதே சாட்டிலைட் உரிமைனு ஒரு சேனலுக்கு வித்திடுறாங்க. வேற சேனல் வாங்கிற படங்களுக்கு எங்க சேனலுக்கு க்ளிப்பிங் தரமாட்டாங்க. முன்னாடி எல்லாம், எல்லா சேனலுக்கும் டிரெய்லர், படத்துடைய சில காட்சிகள்னு ஆபீஸ் தேடி வந்து கொடுப்பாங்க. இப்போ எல்லாம் மாறிடுச்சு. ஒரு வாரத்துக்கு ஆறு படங்கள் வருதுனா, மக்கள் எல்லா படத்துடைய விமர்சனத்தையும் எதிர்பார்ப்பாங்க. ஆனா, எங்ககிட்ட க்ளிப்பிங் இருக்கிற படங்களுக்கு மட்டும்தான் நாங்க விமர்சனம் பண்ணுவோம்னு எப்படி இருக்கமுடியும்? இதுதான் இப்படி ஒரு முடிவெடுக்க காரணம்.”
ஆன்லைன் தளத்துக்கு வரலாமானு யார்கிட்டயாவது ஆலோசனை கேட்டீங்களா?
“என் நண்பர்கள், சினிமா பிரபலங்கள்னு பல பேர்கிட்ட டிஸ்கஸ் பண்ணேன். நிறைய பேர் ஆன்லைன்ல விமர்சனம் பண்ணுங்கனு ஃபேஸ்புக், மெயில்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. விமர்சனம் ஒருதலைபட்சமாக இருக்கக்கூடாது. அதனாலதான் என் விமர்சனத்துக்கு ‘Unbia-scope’னு வெச்சிருக்கேன். சேனல்லயும் நான் விமர்சனம் பண்ணிட்டு, தனியாவும் யூ டியூப்ல விமர்சனம் பண்ணால்தான் தவறு. நான் அங்கே பண்ணாதனால அவங்க எதும் சொல்லலை.”
முதல் விமர்சனமே ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குதான். இது திட்டமிட்டதா?
‘டாப் 10 மூவீஸ்’ சுரேஷ் குமார்
“இல்லை. இனி ஆன்லைன் விமர்சனம் பண்ண ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்து அதற்கு தேவையான விஷயங்களை தயார் பண்ணிட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல இந்தப் படம் வெளியானது. டிரெயல் ஷூட் மாதிரிதான் அதைப் பண்ணோம். அது நல்ல படமாகவும் அமைஞ்சுடுச்சு. சரினு இதையே தொடக்கமா இருக்கட்டும்னு வெச்சுக்கிட்டேன்.”
அந்த நிகழ்ச்சி நிறுத்தியது வருத்தமா இல்லையா?
“நிச்சயமா இல்லை. 1088 வாரங்கள் அந்த நிகழ்ச்சி வந்திருக்கு. அதுதான் எனக்கான அங்கீகாரத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியை எனக்கு பதிலா இன்னொருத்தர் பண்ணும்போதுதான் ‘நம்ம பண்ண முடியலையே’னு வருத்தம் இருக்கும். ஆனா, அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நான் பயணிச்சிருக்கேன்னு நினைக்கும்போது நிறைவா இருக்கு. நிறைய பேர் டாப் 10 மூவீஸ் ஏன் வரதில்லைனு கேட்டாங்க. அவங்களுக்கு இதே விளக்கத்தைதான் கொடுத்தேன்.”
ஆன்லைன் விமர்சகர்களை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?
‘டாப் 10 மூவீஸ்’ சுரேஷ் குமார்
“எந்த ஒரு துறையிலும் போட்டி அதிகமாகிடுச்சுன்னா, அதனுடைய தரம் குறைய ஆரம்பிக்கும். நேர்மையும் நாணயமும் இருந்தால் மட்டுமேதான் அந்தத் துறையில் நீடிச்சு இருக்க முடியும். இல்லைனா, வேகமா வளர்ந்து வேகமா முடிவுக்கு வந்திடும். எவ்ளோ பேர் அந்த வீடியோவைப் பார்க்குறாங்க, எவ்ளோ நேரத்துல பார்க்குறாங்க, எவ்ளோ சப்ஸ்க்ரைபர்ஸ் வெச்சிருக்காங்கனு யூ டியூப்புடைய அளவுகோலுக்கு ஏத்த மாதிரி வேலை செய்றாங்க. அவங்களுக்கு அந்த வீடியோவுடைய தரம் தெரியாது. ஆனால், தரத்தை மக்கள் முடிவு பண்ணிடுவாங்க. வேற வழியே இல்லாமல் சில விமர்சனங்களை பார்க்குறாங்க. அப்படி நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது துரதிஷ்டமான விஷயம்தான்.”
இனி தொடர்ந்து உங்களை யூ டியூபில் எதிர்பார்க்கலாமா? ‘
“ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களுக்கு தரமான விமர்சனத்துடன் உங்களை நோக்கி நான் இருப்பேன்.”
