இந்தியா- பாகிஸ்தான் இடையே மூன்றாம் நாட்டின் சமரசத்திற்கு இடமில்லை என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நியுயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பேச்சு நடத்திய அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளும் விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறினார்.
இந்நிலையில், நியுயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும், இதனை பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிபர் டிரம்ப்புடன் மோடி பேச்சு நடத்துவது தீவிரவாதத்தை எதிர்ப்பது குறித்து மட்டும்தான் என்றும் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். எந்த வகையிலும் இருநாடுகளுக்கும் உதவ தாம் தயாராக இருப்பதாக தெரிவித்த டிரம்ப், மத்தியஸ்தம் செய்யவும் தயார் என்று கூறினார்.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இருநாடுகளும் முரண்பட்டு நிற்பது கவலையளிப்பதாக டிரம்ப் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 5வது முறையாக டிரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் குறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
