ஹிந்தி மொழி தொடர்பான தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், அப்போது தான் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று கடந்த வாரம் டுவிட்டரில் அமித்ஷா தெரிவித்த கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் தான் கூறியது இல்லை என்றார்.
தாய் மொழிக்குப் பின் இரண்டாவது மொழியாக இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே தான் வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிட்டார்.
தானே ஹிந்தி மொழி பேசாத குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தை சிலர் அரசியல் ஆக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவர்களது விருப்பம் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
