ரஷ்யா டுடே ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 1980 ஆம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த காலத்தில், அமெரிக்காவின் நிதியுதவியுடன், முஜாகிதீன் எனப்படும் தலிபான்களுக்கு, பாகிஸ்தானில் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் பிறந்து, ஆப்கானில் ஜிகாத் எனப்படும் போர் புரிவதற்காக, அமெரிக்க நிதியுதவியுடன் வளர்க்கப்பட்டவர்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன்கள் மூலமாக அமெரிக்கா நடத்திய போரில் பாகிஸ்தான் நடுநிலை வகித்திருந்தால் தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் வருந்தியுள்ளார். இதன் மூலமாக 70 ஆயிரம் பாகிஸ்தானியர்களையும், 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்து தாங்கள் தவிப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார்.
அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் சிக்கிக் கொண்ட ஆசிய நாடுகளில் குறிப்பிடத்தக்கது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க, அந்த அரசுக்கு எதிராக போராட முஜாகிதீன்களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு மூலமாக பயிற்சியளிக்கப்பட்டது.
சுமார் 10 ஆண்டுகள் நீடித்த போரில் 15 ஆயிரம் வீர்களை இழந்த ரஷ்யா 1989 ஆம் ஆண்டு ஆப்கானை விட்டு வெளியேறியது. அதன்பின்னர், பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வந்த முஜாகிதீன்கள் யாருக்கு அதிகாரம் என்ற உள்நாட்டுச் சண்டையில் ஈடுபட்ட நிலையில், தலிபான் அமைப்பு அதில் அதிகாரம் மிக்கதாக வளர்ந்து தற்போது வரை பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பயங்கரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த தவறிய காரணத்தால், சர்வதேச நிதியமைப்புகள் பாகிஸ்தானை நிராகரித்து வருகின்றன. கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் அந்த நாட்டிற்கு அருகிப் போயுள்ளன.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாரிசில் இயங்கும், நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பயங்கரவாதத்திற்கான நிதியுதவியைக் கட்டுப்படுத்துவதற்கான பாகிஸ்தானின் செயல்திட்டம் குறித்த இறுதி மதிப்பீட்டு அறிக்கை முன்வைக்கப்பட உள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே சர்வதேச நிதி அமைப்புகள், பாகிஸ்தானிற்கு நிதியுதவி செய்வது குறித்து முடிவெடுக்கும். இதனால் தற்காப்பு முயற்சியாகவே, தலிபான்களுக்கு பயிற்சியளித்தது உண்மைதான் என்று, தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க நிதியுதவியுடன்தான் நடைபெற்றது என்று கூறுவதன்மூலம் அமெரிக்காவையும் பிளாக்மெயில் செய்கிறதோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
