மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரும் 21ம் தேதி நடைபெறுகின்றன. இதற்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடி நேற்று புனே மற்றும் சதாராவில் இரண்டு கூட்டங்களில் பேசினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நடுத்தர மக்களின் பங்களிப்பு மகத்தானது என்று அவர் தெரிவித்தார்.
ஊழல் செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர், ஊழல் செய்த தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றார். அரசியல் பலம் வாய்ந்த தலைவர்கள் மீது யாரும் நடவடிக்கையே எடுக்க முடியாத நிலை இருந்ததாகவும், ஆனால் தற்போது டெல்லியில் இருந்து புனே வரையில் பல தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை மக்கள் பார்க்க முடியும் என்றும் மோடி கூறினார்.
மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீட்டு வரும் வரை தமக்கு ஓய்வே இல்லை என்றும் பிரதமர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர 60 ஆண்டுகளானதாக கூறிய மோடி, எட்டே ஆண்டுகளில் மேலும் ஒரு டிரில்லியன் டாலர் இலக்கு எட்டப்பட்டு அது தற்போது இரண்டு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக கூறினார். 5 டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி பயணித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சிலர் இது சாத்தியமில்லை என விமர்சித்து வருவதாக சுட்டிக்காட்டிய மோடி தாங்கள் வெண்ணையில் கோடு கிழிப்பவர்கள் அல்ல, கல்லில் கோடு கிழிப்பவர்கள் என்று தெரிவித்தார்.ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்.
