காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிமூலவரான அத்திவரதர் சிலை, அந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில், தனி நீரடி மண்டபத்தில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்கு வெளியே எழுந்தருள செய்யப்படும். இந்த வகையில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் சிலை தரிசன நிகழ்ச்சி தொடங்கியது. 31 நாட்கள் சயன கோலத்திலும், கடந்த ஒன்றாம் தேதி முதல் 17 நாட்கள் நிற்கும் கோலத்திலும் அத்திவரதரை பக்தர்கள் தரிசித்தனர்.
அத்திவரதரைக் காண பக்தர்கள் அலையலையாய் வந்திருந்தனர். இறுதி நாளில் மட்டும் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 47 நாட்களில் மொத்தம் ஒரு கோடியே 8 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அத்திவரதர் வசந்தமண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் குளத்திற்கு எழுந்தருளச் செய்ய உள்ளதற்காக யாகம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் அத்திவரதர் சிலைக்கு 3 முறை தைலக்காப்பு நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்குப் பின், இரவு 9 மணிக்கு அத்திவரதரை, கோவிலுக்குள் உள்ள அனந்தசரஸ் குளத்திற்கு எழுந்தருளச் செய்யும் பணி தொடங்கியது. 80 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். வசந்த மண்டபத்தில் இருந்து 100 அடி தூரத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில், அத்திவரதர் சிலையை வைப்பதற்காகவே 20 அடி நீளமும், 15 அடி அகலும், 15 அடி உயரமும் கொண்ட நீரடி மண்டபம் உள்ளது.
இயற்கையான நீருற்றை கொண்டுள்ள அந்த மண்டபத்திற்குள் நள்ளிரவு 12.10 மணிக்கு அத்திவரதரை சயனக் கோலத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றிலும் 20 நாகர் சிலைகள் வைக்கப்பட்டபின் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. 40 ஆண்டுகள் ஜலசயனம் செய்யும் அத்திவரதர், 2059 ஆம் ஆண்டு மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவிலுக்கு எழுந்தருளுவார்.
