100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ள மாவட்டங்களில், 60 நாட்களுக்குள்ளாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைவாக முடிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் தடயவியல் ஆய்வகம் அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைக்கான தடயவியல் அறிக்கை, சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படுகிறதா? என்பதை மாநில அரசுகள் உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
60 நாட்களுக்குள்ளாக இந்த நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும், உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 30 நாட்களில் பதில் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நன்கு பயிற்சி பெற்ற அரசு வழக்கறிஞர்கள் மற்றும் போக்சோ வழக்குகளை கையாளும் திறன் பெற்ற உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
போக்சோ வழக்குகளில் தடயவியல் அறிக்கைகள், சரியான நேரத்தில் கிடைப்பதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
