வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் சாரல் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோன்று தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று காலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல்,திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
