போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகைக்காக ஆயிரத்து 93 கோடி ரூபாயை தமிழக அரசு அனுமதித்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, போக்குவரத்து தொழிலாளர் ஓய்வூதிய நிலுவைத்தொகைக்காக ஆயிரத்து 93 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட தொகையை தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகிய காலக் கடனாக அரசு அனுமதித்துள்ளது. இந்தத் தொகையை ஒரு வாரத்திற்குள் வழங்க அறிவுறுத்தி உள்ளதாகவும் போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த நிதி மூலம் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
