ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்தில், சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனம் 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர நிர்வாக குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, கடனே இல்லாத நிறுவனம் என்ற இலக்கை அடுத்த 18 மாதங்களில் எட்டுவதற்கு தெளிவான பாதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மிகப்பெரிய இந்திய ஏற்றுமதி நிறுவனமாக தற்போது ரிலையன்ஸ் இருப்பதாக தெரிவித்த முகேஷ் அம்பானி, ஜி.எஸ்.டி. செலுத்துவதிலும் முன்னணியில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த நிதி ஆண்டில், 67 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜிஎஸ்டி செலுத்தி இருப்பதாக அவர் கூறினார். ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 34 கோடியை கடந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்த முகேஷ் அம்பானி, சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனமானது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் 20 விழுக்காடு பங்குகளை, ஐந்து லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வாங்க உள்ளதாகக் கூறினார். ரிலையன்சுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அந்நிய முதலீடு இது எனக் குறிப்பிட்ட அவர், இந்திய அளவிலும் இதுவே பெரிய அந்நிய முதலீடாக இருக்கும் என்றார்.
2030ஆம் ஆண்டிற்குள் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று அனில் அம்பானி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கான முதலீடுகள் குறித்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். ரிலையன்ஸின் ஜிகா பைபர் சேவைகள் செப்டம்பர் ஐந்தாம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
