உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டாம் என்று பிரதமர் மோடி தமது அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்திய பிரதமர், அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு வரவேண்டும் என்றும் தாமதமாக வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் அரசு ஆலோசகர், அல்லது கமிட்டிகள் போன்ற முக்கியப் பொறுப்புகளில் பணியமர்த்த வேண்டாம் என்றும் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி அறிவுறுத்துயுள்ளார்.
பொதுவெளியில் பேசும்போது கூறும் கருத்துகளில் கவனமாக இருக்கும்படியும் அமைச்சர்களிடம் எச்சரித்துள்ள பிரதமர் , நிறைவேறக் கூடிய வாக்குறுதிகளை மட்டும்தான் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தனி நபர் ஒழுக்கம், கண்ணியம் போன்றவைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ள பிரதமர் மோடி இந்த மதிப்பீடுகளை தாமும் தவறாமல் கடைபிடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்கை ஒழிக்க முயற்சிகளைத் தொடருமாறும் பிரதமர் மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற தமது அறைகூவலுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் அமீர்கானுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
