கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட பெலகாவி, தார்வாத், கடாக் பகுதிகளிலும் சிக்மகளூர் மற்றும் ஷிவ்மோகா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு பெய்து வரும் தொடர்மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மகாராஷ்டிராவிலும் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாதர், சியோன், மாஹிம், காட்கோபர், தானேவின் சில பகுதிகள் மற்றும் நவிமும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
