ஈவுத்தொகை மற்றும் உபரி நிதியில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க, ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் இருந்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கூடுதல் தொகை கேட்பதாக சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து எவ்வளவு தொகையை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்பதை நிர்ணயம் செய்ய, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலன் தலைமையில் 6 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதன கட்டமைப்பை ஆய்வு செய்து பரிந்துரை அளித்திருந்தது.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது. பிமல் ஜலான் குழுவின் பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு நேற்று ஒப்புதல் வழங்கியது.
இதன்படி, கடந்த நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி நிதியான ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 414 கோடி, திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரித் தொகை 52 ஆயிரத்து 637 கோடி ரூபாய் என ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் 9 லட்சத்து 60 ஆயிரம் கோடி அளவுக்கு உபரி நிதி கையிருப்பில் உள்ளது. மற்ற நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் 14 சதவீத உபரி நிதியை மட்டுமே கைவசம் வைத்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 28 சதவீதம் கையிருப்பில் உள்ளது. இந்த தொகையை வழங்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியதால் கடந்த காலத்தில் சர்ச்சை எழுந்தது.
தற்போது ரிசர்வ் வங்கி அளிக்கும உபரி நிதி, மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதம் என்ற அளவுக்கு நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
