740 கோடி ரூபாய் பண மோசடி தொடர்பான புகாரில், ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மல்வீந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் சிவிந்தர் சிங் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் கிளைகளைக் கொண்ட முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் ரான்பாக்ஸி.
இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மல்வீந்தர் சிங்கும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங்கும் ரெலிகர் என்கிற நிறுவனத்தின் புரொமோட்டார்களாக செயல்பட்டபோது, அந்நிறுவனத்தின் பேரில் பெற்ற 740 கோடி ரூபாய் கடனை, வேறு சில நிறுவனங்களில் முதலீடு செய்து முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரெலிகர் நிறுவனம் சார்பில் கடந்த ஆண்டு புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மோசடி புகார் தொடர்பாக மல்வீந்தர் சிங்கும் அவரது சகோதரர் சிவிந்தர் சிங்கும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரான்பாக்சி நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக ஜப்பானைச் சேர்ந்த மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான டைய்ச்சி சாங்கியோவிடம் கடந்த 2008ஆம் ஆண்டு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
