ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இ சிகரெட்டுக்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்குவதற்காக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜவடேகர், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். இதேபோன்று கடந்த 6 ஆண்டுகளாக பாஜக அரசு தொடர்ச்சியாக ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் 11 லட்சத்து 52 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். இது ரயில்வே உற்பத்தி திறனுக்காக ஊழியர்களுக்கு அரசு அளிக்கும் வெகுமதி என்றும், இதன் மூலம் அரசுக்கு 2024 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் கூறினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் இ சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இ சிகரெட் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, சேகரித்து வைப்பது, வினியோகம், மார்கெட்டிங் மற்றும் அது தொடர்பான விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இந்தியாவில் இ சிகரெட் தயாரிக்கப்படுவது இல்லை என்ற போதிலும், 400 பிராண்டுகளின் இ சிகரெட்டுகள், 150 விதமான நறுமணங்களில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய குடிமக்களின் நலன்கருதி இதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்க அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இ சிகெரெட் பயன்படுத்துபவர்கள் உயிரிழக்க நேரிட்டதால், அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் மிச்சிகன் ஆகிய மாநிலங்களில் இ சிகரெட் பயன்படுத்த அண்மையில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
