கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிமுக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் அவர், தபால் வாக்குகளில் 203 வாக்குகளை எண்ணவில்லை என்றும், அவற்றை செல்லாது என்று கூறி ஒதுக்கி விட்டதாகவும், வாக்கு எண்ணிக்கையின் 19, 20, 21 ஆகிய சுற்றுகளின் போது தம்மை வெளியேற்றி விட்டதாகவும் கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மறுபடியும் எண்ண உத்தரவிட்டார். இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து, ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று முற்பகல் 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்திலேயே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், தேர்தல் ஆணையம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படியும் உத்தரவிட்டார்.
அதன்படி, வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் 24 பேரும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி அலுவலரும் உயர்நீதிமன்றம் வந்துள்ளனர். ராதாபுரம் சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டிந்த தபால் வாக்குகளும், ராமையன்பட்டி அரசு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தனி வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டுவரப்பட்டு, இன்று காலை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
