சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தனை இன்று விடுவிக்கும் பாகிஸ்தான், வாகா எல்லையில் வைத்து அவரை ஒப்படைக்கிறது. இதை முன்னிட்டு, எல்லையை ஒட்டி அமைந்துள்ள அட்டாரி பகுதியில் தேசியக் கொடிகளுடன் பொதுமக்களும் திரளத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் வலியுறுத்தல் மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக, அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நேற்று தெரிவித்தார். அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்திய போர் விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என அவர் அறிவித்தார்.
அதன்படி இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லையில் வைத்து அபிநந்தனை பாகிஸ்தான் தரப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கிறது. வாகா வழியாக இந்தியாவிற்குள் வரும் அபிநந்தனை இந்திய விமானப் படை குழு அட்டாரியில் வரவேற்கிறது. அபிநந்தனின் பெற்றோரும் அங்கு அவரை வரவேற்கின்றனர். நாடுபோற்றும் விமானப்படை வீரர் அபிநந்தனை வரவேற்க அட்டாரி பகுதியில் தேசியக் கொடிகளுடன் பொதுமக்களும் திரளத் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் அபிநந்தனை வரவேற்க திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே, அபிநந்தன் விடுவிக்கப்படுவதற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அபிநந்தனை விடுவிக்கும் பாகிஸ்தானின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேற்கொண்டு இருதரப்பும் ராணுவ நடவடிக்கைகளில் இறங்குவது நிலைமையை மோசமடையச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், தீவிரவாத கட்டமைப்புகளை அழித்து, அவர்களுக்கு நிதியுதவி செல்வதை பாகிஸ்தான் அரசு தடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதேபோல அபிநந்தன் விடுவிக்கப்படும் நடவடிக்கை வரவேற்கத் தக்கது என்று ஐ.நா. பொதுச்செயலாளருக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. மாமன்றம், இதுவே ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் செய்தி என்றும் கூறியுள்ளது.
