வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் இந்தியா – வங்க தேசம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வங்கதேசத்தின் சிட்டகாங், மங்ளா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த அனுமதிப்பது,திரிபுரா மாநில குடிநீர் தேவைக்கான வங்க தேசத்தின் பென்னி ஆற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 1.82 கன அடி வீதம் இந்தியாவுக்கு தண்ணீர் வழங்குவது, ஐதராபாத்- டாக்கா பல்கலை கழகங்கள் இடையிலான ஒப்பந்தம், கலாச்சார பரிவர்த்தனை, இளைஞர் நல மேம்பாட்டில் ஒத்துழைப்பு, கடல் சார் கண்காணிப்பில் இணைந்து ஈடுபடுவது, வங்கதேசத்திற்கு ஏற்றுமதிக்கு கடன் உதவி அளிப்பது ஆகிய 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது தவிர வங்க தேசத்தில் இருந்து சமையல் எரிவாயு இறக்குமதி, டாக்காவில் விவேகனந்தா பவன், ராமகிருஷ்ணா மிஷன், வங்கதேசத்தில் குல்னாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ஆகியவற்றை இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா- வங்க தேசம் இடையே மொத்தம் 12 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றார். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று அவர், வங்க தேசத்தின் வளர்ச்சியில் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றார்.
இதன் பின்னர் பேசிய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா, வங்க தேசத்தில் இருந்து சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா, மிகப்பெரிய உதவியை செய்து உள்ளது என்றார்.
பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஷேக் ஹசீனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.நரேந்திர மோடி – ஷேக் ஹசீனா சந்திப்பின் போது, வங்கதேச நாட்டின் துணைத் தூதகரத்தை சென்னையில் அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருநாடுகள் இடையேயான விமானங்களின் சேவையை வாரத்திற்கு 120 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
