நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காவல் நிலையம் முன்பு இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வேதாரண்யத்தில் இரு சமூகத்திற்கு இடையே அடிக்கடி நீண்ட காலமாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர், மற்றொரு தரப்பினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் உருவானது. வேதாரண்யம் காவல் நிலையம் முன்பு ஒரு தரப்பினரின் பொலிரோ கார், மற்றொரு சமூகத்தை சேர்ந்த தரப்பால் கட்டையால் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே கலவரம் ஏற்படும் சூழல் நிலவி வருவதால், வேதாரண்யத்தில் அனைத்து கடைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றதால், வேதாரண்யம் காவல் நிலையத்தில் குறைந்த அளவிலான போலீசாரே இருந்துள்ளனர்.
இதனால் மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு பதற்றமான நிலை நீடிப்பதால் அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் இருத்தரப்பை சேர்ந்த 2 பேர் காயங்களுடன் வேதாரண்ம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை எஸ்.பி ராஜ சேகரன் மோதல் ஏற்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழாமல் தடுப்பதற்காக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேசேகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான சூழல் காரணமாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
வதந்திகள் பரவுவதை தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவையின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, வன்முறை தொடர்பாக இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
