பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் இந்திய அரசு நிர்வாகம் செய்யும் காலம் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் அமைச்சர்கள் அவரவர் துறையில் கடந்த 100 நாட்களில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜி-20, பிரிக்ஸ் உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் குரல் இப்போது ஓங்கி ஒலிப்பதையும், அனைத்து நாடுகளும் இந்தியாவின் குரலுக்கு உரிய மதிப்பளிப்பதையும் காண முடிகிறது என்றார்.
நாட்டின் உள்நாட்டு கொள்கைக்கும், வெளிநாட்டு கொள்கைக்கும் நெருக்கமான உறவு உள்ளது என்ற அவர், உள்நாட்டு இலக்கிற்கான கொள்கைகளும், வெளிநாட்டு இலக்கிற்கான கொள்கைகளும் மிக வலிமையானவை ஒன்றிணைந்தவை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 100 நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை மிக தீவிரமாக பணியாற்றி உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்த மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அவர், 18 நாடுகளில் தூதரகங்கள் திறக்கப்பட உள்ளன என்றார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முறியடிப்பது போன்ற நடவடிக்கைகள் நாட்டிற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளதாக அவர் கூறினார். அண்டை நாடுகளுடன் நல்ல உறவை பேண இந்திய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
ஆனால் இந்தியா மட்டுமே சந்திக்கும் ஒரு வித்தியாசமான பிரச்சனை ஒரே ஒரு அண்டை நாட்டினால் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். எல்லை தாண்டும் பயங்கரவாத த்தை முறியடிக்க இந்தியா வலிமையான முயற்சி எடுத்தால், அந்த அண்டை நாடு, ஒரு சாதாரண நாடாக மாறும் என்ற அவர், அது வரை இது போன்ற சவால் தொடரும் என்றார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு மிக நல்லமுறையில் வளர்த்து வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். உறவுகள் வளரும் போது சில பிரச்சனைகளும் உருவாகும் என்ற அவர், அது போன்ற சிறிய பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு வருவதாக கூறினார். அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் டிரம்பும் பங்கேற்க உள்ளதே இரு நாட்டு உறவுக்கு எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்தார்.
லடாக் பிராந்தியத்தில் இந்தியா-சீனா படைகளுக்கு இடையிலான மோதலை குறிப்பிட்ட ஜெய்சங்கர், அது பெரிய சிக்கலுக்கு வழிவகுக்க வில்லை என்றார். இருநாட்டு எல்லைகளில் இரு போன்ற உரசல்கள் நேருவது சகஜம் என்ற அவர், பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டது என்றார். மலேசியாவில் உள்ள ஷாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஷாகிர் நாயக்கை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று ஜெய்சங்கர் கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் இந்தியாவே நிர்வாகிக்கும் காலம் வரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
