புதுடில்லி : சுதந்திர தின உரையின் போது தண்ணீர் பிரச்னை பற்றி பேசிய பிரதமர் மோடி திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி பேசினார்.மோடி தனது உரையில், வறுமையை ஒழித்து விட்டால் மக்கள் அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன. நீண்ட தூரம் நடந்த சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. கடந்த கால அரசுகள் ஏழை மக்கள் பற்றி கவலைப்படவில்லை. நீர் பிரச்னையை தீர்க்க ஜல் ஜீவன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.திருவள்ளுவர் கூறியது போல், “நீரின்றி அமையாது உலகு”. 70 ஆண்டுகளில் செய்யாததை 4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம். விவசாயம், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டிய தருணம் இது. பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர், தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார்.
அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டிருக்கிறது.வீடுகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் திட்டத்திற்காக ரூ.3.50 லட்சம் கோடி ஒதுக்கப்படும். மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும்.வியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம்.
1450 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு, மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும். தேவையற்ற சட்டங்கள் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் உலகம் இந்தியாவின் ஆற்றலை தெரிந்து கொண்டுள்ளது. 75 சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது என்றார்.
