அபுதாபி: பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயரிய சிவில் விருது வழங்கப்பட்டது. ‘ஆர்டர் ஆப் சையது’ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் மோடி.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை அதிகரிப்பதில் மோடியின் முயற்சிகளுக்கான பாராட்டு அடையாளமாக இன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘ஆர்டர் ஆஃப் சயீத்’ (Order of Zayed) விருது நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அந்த முக்கிய பிரமுகர்கள் வரிசையில் இந்திய பிரதமர் மோடியும் இடம்பிடித்துள்ளார்.
“ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஸ்தாபகத் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் பெயரில் இந்த விருது, ஷேக் சயீத்தின் பிறந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டதால் சிறப்பு முக்கியத்துவத்தைப் பெறுகிறது” என்று வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ. ) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் மிக உயர்ந்த விருதை மோடிக்கு வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.
ஏப்ரல் மாதம் அபுதாபியின் மகுட இளவரசர் மொகமது பின் சயீத் அல் நஹ்யான், வெளியிட்ட ட்வீட்டில் “இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று மற்றும் விரிவான உறவுகள் உள்ளன, இவை எனது அன்பான நண்பர் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய பங்களிப்பால் இரு நாட்டு உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.
சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நான்காவது பெரிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
