ஜம்மு-காஷ்மீருக்கு புதிய விடியல் பிறந்திருப்பதாக கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில வளர்ச்சியை தடுத்து, பயங்கரவாதத்திற்கும், ஊழலுக்கும் காரணமாக இருந்த 370ஆவது பிரிவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை குறித்து, இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சி வாயிலாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா வரலாற்று முக்கியத்துவமான முடிவை எடுத்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரின் வரலாற்றில் புதிய அத்தியாயம், புதிய விடியல் பிறந்திருப்பதாக மகிழ்ச்சி வெளியிட்டார். வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைப்பதில் உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டார்.
சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில், தீவிரவாதத்திற்கும், ஊழலுக்கும் ஊக்களிமளித்துக் கொண்டிருந்த 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாகியிருப்பதாக கூறினார். ஜம்மு-காஷ்மீரில், தீவிரவாதத்தால் 42,000 பேர் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்றும், பிரதமர் உருக்கமுடன் குறிப்பிட்டார்.
370 ஆவது பிரிவு நீக்கப்பட்டிருப்பதன் மூலம், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் காஷ்மீர் மக்களுக்கு நீக்கமற கிடைப்பதற்கான நடவடிக்கை என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளர்ச்சியின் பாதையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த காஷ்மீர் மக்கள் இனி முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள் என்றும், அதை நிகழத்தான் போகிறது என்றும் பிரதமர் கூறினார். பல பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத, அனைத்து சலுகைகளும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார். ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிய பின்னர் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
