இன்று நள்ளிரவுக்கு பின் புறப்பட்டு, நாளை பிற்பகல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைகிறார். செப்டம்பர் 27 வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து நியுயார்க்கில் நேற்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட ஐநாவுக்கான சிறப்பு பிரதிநிதி சையத் அக்பருதீன், பிரதமர் மோடி -அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்தும் விவரித்துள்ளார்.
ஹூஸ்டன் நகரில் 22ம் தேதி காலையில் பிரதமர் மோடி- அதிபர் டிரம்ப் சந்திப்பு நிகழ உள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள ஹவுடிமோடி நிகழ்வில் பிரதமர் மோடியுடன் எதிர்பாராத விருந்தினராக அதிபர் டிரம்ப்பும் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் அதிபர் டிரம்புடன் மோடி பேச்சு நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அறிவித்த டிரம்ப், மோடியுடனான சந்திப்பில் இப்பிரச்சினையை எழுப்ப மாட்டார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதன் தொடர்பான அனைத்தும் உள்நாட்டு விவகாரங்கள் என்றும், இதில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியர்கள்- அமெரிக்கர்கள் பங்கேற்க உள்ள 90 நிமிட கலாசார நிகழ்ச்சியிலும் மோடியுடன் டிரம்ப் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் சுமார் 400 கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
செப்டம்பர் 23ம் தேதி சுற்றுச்சூழல் தொடர்பான மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இதன் பின்னர் நியுயார்க் செல்ல உள்ள பிரதமர் மோடி, செப்டம்பர் 24ம் தேதி ஐநா.சபை ஏற்பாடு செய்துள்ள மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். வரும் 27ம் தேதி ஐநா. பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்று பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் உரை நிகழ்த்த உள்ளதால் உலகின் கவனம் ஐநா கூட்டத்தை எதிர்நோக்கி திரும்பியுள்ளது. ஐநா. பொதுக்குழு கூட்டத்தில் உரை நிகழ்த்திய பின் அன்றைய தினமே புறப்பட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்ப இருக்கிறார்.
