சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்ததை அடுத்து, நேற்று அந்த ரயில் 5 மணி நேர தாமதத்திற்கு பின் இந்திய எல்லைக்கு வந்தது.
காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவுடனான தூதரக உறவு, வர்த்தக உறவை முறித்துக் கொள்ளப் போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும், டெல்லியில் இருந்து லாகூர் வரை, வாரம் இருமுறை இயங்கி வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, ரத்து செய்வதாக, பாகிஸ்தான் அறிவித்தது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானின் வாகா எல்லையில், நேற்று ரயில் திடீரென நிறுத்தப்பட்டது.
இந்த ரயிலில் 76 இந்தியர்களும், 42 பாகிஸ்தானியர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, இந்தியா தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அங்கிருந்து ரயில் இயக்கப்பட்டு 5 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் இந்திய எல்லைக்குள் உள்ள அட்டாரிக்கு பயணிகள் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
