இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பில் கடலோரக் காவல்படை நிலையத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் ஹராமி நலா க்ரீக் (Harami Nala creek) வழியாக கட்ச் வளைகுடாவிற்குள் ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் நீருக்கடியில் இருந்து தாக்குதல் நடத்துவதில் கைதேர்ந்தவர்கள் என கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எத்தகைய அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்க உச்சபட்ச பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கட்ச் வளைகுடா அருகில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் அனைத்து கப்பல்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கப்பல்கள் அருகே சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளை உணர்ந்தால், கடல்சார் கட்டுப்பாட்டு நிலையம், மற்றும் துறைமுக செயல்பட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முந்த்ரா துறைமுகத்தில் உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அருகில் கடற்கரைப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
