ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில், ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முன்னதாக, சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்ட அமலாக்கத்துறை, பணமோசடி குற்றம் என்பது, சமூகத்திற்கும் தேசத்திற்கும் எதிரான குற்றம் என குறிப்பிட்டது. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வில், அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிதம்பரத்திற்கு எதிராக திரட்டுப்பட்டுள்ள ஆதாரங்களை இப்போது வெளியிட முடியாது என்றும், அப்படி வெளியிட்டால் பணம் எப்படி கைமாறியது என்பதற்கான சான்றுகளை அழிப்பதற்கு வழிவகுத்துவிடும் என்றும் தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில், முறைகேடாக பெறப்பட்ட பணத்தை மறைக்கும் முயற்சிகள் 2009ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடைபெற்றதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் உள்ள மிகப்பெரிய சதியை வெளிக்கொண்டுவர சிதம்பரத்தை காவலில் விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது.
சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதிப்பதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளது. அதுவரை அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்ய நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.
இதனிடையே, 2007ஆம் ஆண்டில், இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது. இதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இருந்த அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் விதிகளை மீறி முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில், மகன் கார்த்தியின் வலியுறுத்தலின்பேரில், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் முறைகேட்டிற்கு உதவியதாகவும், இதற்கு பிரதிபலனாக கார்த்திக்கு லஞ்சப் பணம் மறைமுக வழிகளில் கைமாறியுள்ளது என்பதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டாகும்.
மகள் ஷீனா போரா கொலை வழக்கில் தற்போது சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஜூலையில் அப்ரூவராக மாறியுள்ளார். மேலும் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தது தொடர்பான விவரங்களையும் விசாரணை அமைப்புகளிடம் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, கடந்த வாரம் புதன்கிழமை சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக மும்பை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்திராணி முகர்ஜியிடம், ப.சிதம்பரம் கைது குறித்து செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். சிதம்பரம் கைது செய்யப்பட்ட நல்ல செய்தி என இந்திராணி முகர்ஜி பதிலளித்தாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
