நகரத்தில் வீடு கட்டுவோர் எளிதில் அனுமதி பெறும் வகையில் வருகிற டிசம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறை நடைமுறைக்கு வர உள்ளதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஃபிக்கி எனப்படும் இந்திய தொழில் வர்த்தக அமைப்பு மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் மனை வணிக தொழில் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2ம் இடம் வகிப்பதாகப் பேசினார். தொடர்ந்து நகரத்தில் வீடு கட்டுவோர் எளிதில் அனுமதி பெறும் வகையில் வருகிற டிசம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறை நடைமுறைக்கு வர உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க 13 லட்சத்து 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறினார்.
குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பேசிய துணை முதலமைச்சர், வரும் 2023 ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லா மாநிலமாக தமிழகம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
