இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேற்குவங்க நபரை, அம்மாநில போலீசாரும் என்ஐஏ அதிகாரிகளும் இணைந்து சென்னை நீலாங்கரையில் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்கத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்ற நபரை, அம்மாநில போலீசார் வழக்கு ஒன்றில் தேடி வந்துள்ளனர். அந்த நபர் சென்னை வந்து, நீலாங்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளான். இதை அறிந்த மேற்கு வங்க காவல்துறையை சேர்ந்த தனிப்படையினர், அவனை கைது செய்வதற்காக சென்னை வந்து, தமிழக காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
இதனிடையே, பீகாரில் 2013ஆம் ஆண்டில் புத்தகயாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் ஷேக் அப்துல்லா தொடர்பில் இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள், மேற்குவங்க போலீசாருடன் இணைந்து சென்னை நீலாங்கரையில் பதுங்கியிருந்த ஷேக் அப்துல்லாவை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
பின்னர் கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அவனை கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அவனை மேற்குவங்கம் கொண்டு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
