பாரம்பரிய பண்டிகையாம் ஓணம் பண்டிகையை நாடு முழுவதும் மலையாள மக்கள் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில் நிறைவுபெறுகிறது.
தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். பலவகை ருசியான உணவுகள் சமைத்து உண்டு இந்த நாளை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.
தும்பி துள்ளல், புலி விளையாட்டு, ஊஞ்சலாட்டம் போன்றவைகளால் கிராமங்கள் களைகட்டும். பாரம்பரிய படகுப் போட்டிகள், களறி போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.
ஓணம் திருவிழாவை ஒட்டி கேரள நகரங்களில் யானைகளின் பவனி கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. யானைகளை அலங்கரித்தும் பட்டாடை ஆபரணங்கள்அணிவித்தும் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.
பருவ மழைக்காலம் முடிந்து கேரளத்தில் எங்கும் பசுமை பூத்திருக்கும் காலத்தில் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் குடும்பங்களில் மகிழ்ச்சி தழைத்தோங்குகிறது.
