உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் நிறைவேறியது.
கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தில் 58 ஆயிரத்து 669 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட 30 நீதிபதி பணியிடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாத காரணத்தினால் முக்கிய விவகாரங்கள் குறித்த வழக்குகள் மீது விசாரணை நடத்தி முடிவெடுக்க அரசியலமைப்பு அமர்வுகளை ஏற்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் எண்ணிக்கையை 30-லிருந்து 33-ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று அறிமுகம் செய்தார். விவாதத்திற்குப் பின் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
