மாமல்லபுரத்தில் சீன அதிபரும், பிரதமர் மோடியும் , 11, 12 ஆகிய இரு நாட்களில் சுமார் 6 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக கடற்படை போர்க்கப்பல்கள், விமானப்படை விமானங்கள், போலீசார் என இதுவரை இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா- சீனா இடையிலான உறவை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் மட்டுமே தனித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று கடந்த ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27,28 ஆகிய தேதிகளில் சீனாவின் ஊகான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் டோக்லாம் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.
இதையடுத்து இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று வருகிற 11-ஆம் தேதி ஜி ஜின் பிங் சென்னை வருகிறார். அன்று மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தனி விமானத்தில் வந்து இறங்கும் ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார்.
சுமார் 15 நிமிட நேரம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் பின்னர் அங்கிருந்து கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மோடி பயணமாகிறார். விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ஜின் பிங், மதியம் 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.
அந்த ஓட்டலில் தங்கும் ஜின் பிங், மாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் புறப்படுகிறார். சென்னையில் இருந்து 55 கிலோ மீட்டர் தூரம் காரில் செல்லும் அவர், மாலை 4.55 மணி அளவில் மாமல்லபுரம் சென்றடைகிறார்.
அங்கு அவரை பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். இதன் பின்னர், தலைவர்கள் இருவரும், மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் வர, புராதன கலை சின்னங்களை பார்வையிடுகிறார்கள்.
மாமல்ல புரம் கடற்கரை கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கண்ணாடி மண்டபத்தில் இரவு விருந்திலும் தலைவர்கள் இருவரும் பங்கேற்கிறார்கள். இதன் பின்னர் இரவு 8.05 மணி அளவில் மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு கிண்டி ஓட்டலுக்கு ஜின் பிங் வந்து சேர்கிறார்.
12 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு கிண்டி ஓட்டலில் இருந்து புறப்படும் ஜின் பிங், காலை 9.50 மணி அளவில், மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு அவரும், பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அங்கு மதியம் 12.45 மணி வரை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, மதிய விருந்தும் நடைபெறுகிறது.
விருந்துக்கு பின்னர் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ஜின் பிங்,1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்கிறார். மதியம் 1.30 மணிக்கு அவர் சென்னையில் இருந்து சீனாவுக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார்.
இரு நாட்டு தலைவர்களின் வருகையை ஒட்டி, மாமல்லபுரம் மற்றும் சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதனிடையே சீனாவில் இருந்து அதிகாரிகள் 150 பேர் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். ஜின் பிங் பயணம் செய்வதற்காக சீனாவின் ஹோங்கி நிறுவனம் தயாரித்த லிமோசின் எல் 5 ரக கார்கள் நான்கு தனி விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
18 அடி நீளமும், 6.5 அடி அகலும், 5 அடி உயரமும் கொண்ட அந்த கருப்பு நிற கார்கள் அனைத்துமே குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசத்தை கொண்டு உள்ளன.
402 குதிரை சக்தி திறன் கொண்ட 8 ஸ்பீட் தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட அந்த கார்கள் எட்டே நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
3152 கிலோ எடை கொண்ட அந்த கார்கள் இடைநில்லாமல் 500 மைல் தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை. இந்திய மதிப்பில் சுமார் 5 கோடியே 69 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அந்த கார்களில் பல அதி நவீன வசதிகள் உள்ளன.
