கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யத் தயார் என்று பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா அறிவித்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஒருவர், தாம் காங்கிரசில் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு எதிராக, இருகட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள், சபாநாயகரிடம், தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
இக்கடிதங்களின் மீது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காத நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் நேற்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பதாக தெரிவித்தார். கட்சியை விட்டு விலக வேண்டாம் என மற்றொரு எம்.எல்.ஏ.வான சுதாகர் ரெட்டியை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாகராஜின் இந்த நடவடிக்கை குறித்து, மும்பை நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள இதர அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் .
இதனிடையே, கர்நாடக முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா, குமாரசாமி அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீரமானம் தாக்கல் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்க விரும்பவில்லை என்றும், தேர்தலுக்கு கடுமையான செலவு செய்யப்பட வேண்டியிருக்கிறது என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
