கர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்க்கிறது. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. அதன் உப அணையான தாரகாவில் இருந்து நொடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம், காவிரியில் பாய்கிறது. கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியதால், வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் மொத்தமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
திறந்து விடப்பட்ட நீரானது நொடிக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கன அடி என்ற வீதத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வருவதால், அங்குள்ள அருவிகள் மூழ்கின.
ஒகேனக்கல்லில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 82 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு அதிகளவில் நீர்வரத்து வருவதால் பொதுமக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மூலக்காடு, பன்னவாடி, கோட்டையூர், செட்டியூர், காவேரிபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணை பகுதிகளில் நீரில் இறங்கி குளிப்பது, நீச்சல் அடிப்பது, மீன்பிடித்தல், செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 61.8 அடியைத் தாண்டியுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீர் இதேஅளவில் தொடரும் பட்சத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
