சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான செயல்திட்டத்தை தயாரிக்க இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்டிசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவில் இருந்து வெளியேறி மற்ற நாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள், நிச்சயம் இந்தியாவை பரிசீலிக்கும் என்றார்.
எனவே அந்த நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க வேண்டியது அரசுக்கு முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். அதற்கான செயல்திட்டத்தை தான் தயாரித்து அவர்களை அணுக இருப்பதாகவும், ஏன் முதலீடு செய்வதில் இந்தியா விருப்பத்திற்குரிய நாடாக இருக்கிறது என்பதையும் விளக்க இருப்பதாகவும் கூறினார். பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
உலகலாவிய பொருளாதார வளர்ச்சி வேகத்தை மீட்டெடுக்க ஜி20 நாடுகள் அமைப்பு கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முழு வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
