இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவில் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள படக்குழுவினர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கனமழை காரணமாக கடந்த இரு நாட்களில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக 500-க்கும் மேற்பட்டோர் பரிதவிக்கின்றனர். சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் படை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் சத்ரா பகுதியில் ‘கயாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங் நடந்து வந்தது. இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வந்தார். இயக்குநர் சணல்குமார் சசிதரன் இயக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் இமாச்சலப் பிரதேசத்தில் படமாக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் அங்கு பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் மஞ்சுவாரியர் உட்பட மலையாளப் படப்பிடிப்புக் குழுவினரும் சிக்கிக் கொண்டனர். நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. நடிகை மஞ்சுவாரியர், சணல் குமார் சசிதரன் உட்பட மொததம் 30 பேர் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
நேற்று இரவு சேட்டிலைட் தொலைபேசி மூலம் மஞ்சுவாரியர், தனது சகோதரரைத் தொடர்புகொண்டு நடந்த விவரங்களைக் கூறியுள்ளார். இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரனுக்குத் தகவல் அளித்து அவர் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூருக்குத் தகவல் அனுப்பியுள்ளார். நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட மலையாள படக்குழுவினரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மலையாள சினிமாவில் 25 ஆண்டுகளாக நடித்து வருபவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி. மஞ்சு வாரியர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யு’ படம் தமிழில் ’36 வயதினிலே’ என்று மறு ஆக்கம் செய்யப்பட்டது. பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலுடன் ‘லூசிஃபர்’ படத்தில் நடித்த மஞ்சு வாரியர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் ‘அசுரன்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
