தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
சதாசிவம், எஸ்.ஏ.பாப்டே, தஹில்ரமாணி ஆகிய 3 நீதியரசர்களுக்கு மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டத்தை குடியரசு தலைவர் வழங்கினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாண்பமை சட்டவியல் முனைவர் பட்டம் பெறும் 3 நீதிபதிகளின் சிறப்புகளை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழில் பேசிய முதலமைச்சர், மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி என நீதிக்காக தலைவணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த மண் தமிழ்நாடு என்றார்.
விழாவில் சிறப்புரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிட உயர்நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனையை கடந்த 2017ஆம் ஆண்டு தாம் முன்வைத்தாகக் குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனையை சத்தீஸ்கர் உள்ளிட்ட உயர்நீதிமன்றங்கள் செயல்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்கள், கேரள உயர்நீதிமன்றத்தில் மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புகளை தமிழிலும் கிடைக்கச் செய்யலாம் எனவும் அவர் கூறினார்.
வாய்தா எனும் சட்டக் கருவி அவசர கால பயன்பாட்டிற்குப் பதிலாக, வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால், அது குடியரசு முறையையே பரிகசிப்பதாக ஆகிவிடும் என்று கூறிய அவர், சட்டத்தொழில் துறை இந்த நிலைக்கு ஒட்டுமொத்தமாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தினார்.
