நகைக் கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவன் வாகன சோதனையில் பிடிபட்டான். அவனுடன் வந்த சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவன் தப்பியோடி தலைமறைவாகியுள்ளான். அவனை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், சுரேஷ் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது. எனவே முருகனுக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என்று சந்திகேக்கிகப்படும் நிலையில், அவனைப் பிடிக்க திருச்சி, கருர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சீராத்தோப்பைச் சேர்ந்த முருகன் மீது தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வங்கிகளின் சுவர்களில் துளையிட்டு கொள்ளையடிப்பது, ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிப்பது போன்றவற்றில் முருகன் கைதேர்ந்தவன் என போலீஸ் வட்டாரம் கூறுகிறது.
பெரிய அளவிலான கொள்ளையில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் முருகன் தனது சொந்த ஊரான சீராத்தோப்பு வந்து உறவினர்களுக்குத் தேவையான பணத்தை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
தற்சமயம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கொள்ளையன் முருகன் மாலைக்குள் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அப்படி அவன் சிக்கும்பட்சத்தில் இந்த கொள்ளை வழக்கு முடிவுக்கு வரலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
இதனிடையே கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என்று கூறப்படும் 8 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சுரேஷின் தாய், உறவினர்கள் உட்பட 5 பேரிடம் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார், முருகனின் கூட்டாளிகள் எட்டு பேரைப் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
