திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ,காலசம்ஹார மூர்த்தி,பாலாம்பிகை திருக்கோயில்”.திருக்கடையூரில் திருஅவதாரம் செய்தவர் கலயன் எனும் சிவபக்தர்.கலயன் என்றால் இத்தல ஈசன் அமிர்த கலயத்தால் ஆனவர் ஆதலால் இவருக்கு இவரது பெற்றோர் கலயன் எனப் பெயரிட்டனர்.இவர் தன்னிடம் உள்ள செல்வத்தைக்கொண்டு அடியவர்களை உபசரித்து வந்தார்.
அதுமட்டுமல்ல தினமும் இத்தல அபிராமி அம்பாளுக்கும்,அமிர்தகடேஸ்வரருக்கும் குங்கிலியத் தூபம்[சாம்பிராணித் தூபம்] தவறாமல் இட்டு வரும் திருப்பணியைச் செய்து வந்தார்.திருஅருட் செயலால் அதன் பொருட்டு தம் அனைத்து சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடினார்.வறுமையில் வாடினாலும் தாம் செய்யும் தூப திருப்பணியைத் தவறாமல் செய்து வந்தார்.
ஒருநாள் கடும் பட்டினி வீட்டில் மனைவிக்கும்,குழந்தைகளுக்கும் உண்ண உணவில்லை.ஆம்!கையில் பொருள் இல்லை.இதனால் ஆலயத்தில் குங்கிலிய தூபம் இடவும் வழியில்லை.பசியில் கலயனாரின் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தன.இதனால் பெரிதும் மனம் கலங்கி சித்தத்தில் இத்தல ஈசனை எண்ணிக்கொண்டே ஓரமாய் அமர்ந்திருந்தார் கலயனார்.பசியினால் அழுதுகொண்டிருந்த குழந்தைகளின் முகம் பார்த்து வாடிய கலயனாரின் மனைவி தன் கழுத்தில் கிடந்த தாலியை அவர் கையிலே கொடுத்து அதை விற்று நெல் வாங்கி வாரும் என்றார்.
தாலியை கையில் வாங்கிய கலயனார் நெல் வாங்கி வரப் போனார்.இப்போதும் அவர் மனசெல்லாம் இன்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கும்,அபிராமி அம்மனுக்கும் குங்குலிய தூபம் காட்டமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தது.அப்போது வழியிலே ஒரு வணிகன் குங்கிலியப் பொதி [சாம்பிராணி மூட்டை]கொண்டு வரக் கண்டு,அவனிடம் தம் கையிலிருந்த தம் மனைவியின் தாலியை விலையாகக் கொடுத்து,
அதற்கு ஈடாக அந்த குங்குலிய மூட்டை முழுவதையும் பெற்றுக்கொண்டு திருக்கடையூர் ஆலயத்துக்குச் சென்று அங்கு குங்கிலியத்தை புகைய விட்டு சுவாமியை துதித்துக்கொண்டு இருந்தார் கலயனார்.அதில் வீட்டை மறந்தார்;மனைவி,குழந்தைகள் பசியால் துடிப்பதை மறந்தார்.
அப்போது அங்கு இருந்த அன்பர் ஒருவர்,“என்ன கலயனாரே!சாம்பிராணி புகை போடுவது போல் குங்குலியத்தை இப்படியா போடுவது”எனக்கேட்க உடனே,”சிவத் தொண்டு செய்வதில் கணக்குப் பார்க்க கூடாதய்யா” என்றபடி உள் பிரகாரத்தில் அமர்ந்து சிவாயநம கூறி தியானத்தில் அமர்ந்தார் கலயனார்.ஆனால் அங்கு கலயனார் வீட்டில் பசியால் வாடிப்போன அவரது குழந்தைகளும்,மனைவியும் நெல் வாங்கி வந்துவிடுவார் எனக்கருதி கலயனாரின் வருகைக்கு காத்திருந்தனர்.
சிறிது நேரத்தில் ஆலயத்தின் பிரகாரத்தில் படுத்து உறங்கிப் போனார் கலயனார்.வீட்டில் கலயனாரின் வருகையை எதிர்பார்த்து கவலையுடன் பசிக் கொடுமையால் வாடியிருந்த கலயனாரின் மனைவியும் குழந்தைகளும் உறங்கிப் போயினர்.அப்போது கலயனார் மனைவியின் கனவில் வந்த ஈசன்,”உத்தமியே! உன் கணவன் இப்போது நம் கோயிலில் உறங்கி கொண்டிருக்கிறான்.அவன் பக்தியின் உயர்வை உலகிற்கு உணர்த்த வேண்டியே வறுமையைக் கொடுத்தோம்.
கையில் பொருள் இல்லாமல் குடும்பமே பசியால் வாடி வதங்கியபோதும்,நீ உணவு வாங்கி வரச்சொல்லி உனது திருமாங்கல்யத்தை கொடுத்தபோதும்,அதற்கும் குங்கிலியம் வாங்கி வந்து எமது கடவூர் ஆலயத்தில் எமக்கு குங்கிலிய தூபம் காட்டி மகிழ்வித்து வீட்டை மறந்து இதோ உறங்கி கொண்டிருக்கிறான்.
பதறாதே!குபேரன் எமது கட்டளையின்படி இப்போதே உங்கள் இல்லத்தில் சகல வசதிகளையும் ,வளங்களையும் அளித்து,பொன்,பொருள் ,செல்வம் முதலியவற்றால் உங்கள் இல்லத்தை நிறைப்பான்.கலயனின் உண்மையான தூப சேவைக்கு எமது அன்பு பரிசு.கண் திறந்து பார்”என்று அருளி மறைந்தார் கடவூர் ஈசன்.விழித்துப் பார்த்த கலயனாரின் மனைவியால் நம்ப முடியவில்லை.
ஆம்!கனவில் ஈசன் கூறியதுபோல இப்போது அவள் வீட்டில் நெல் மூட்டைகளும், பொன் மூட்டைகளுமாக குவிந்திருந்தன.வறுமை தாண்டவமாடிய அந்த வீடு ஈசன் அருளாசியால் பெரும் மாளிகையாக மாறி இருந்தது.இங்கே ஆலயத்தில் தூங்கி கொண்டிருந்த கலயனார் அப்போதுதான் விழித்து திடுக்கிட்டார்.வீட்டு நினைவு அவருக்கு வந்து மனைவி தாலியை கழற்றிக்கொடுத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கிவர சொன்னாரே என்ற எண்ணம் மேலிட ஆலயத்திலிருந்து வீட்டிற்க்குப் புறப்பட்டார்.
தன்னுடைய தெருவில் வீட்டை தேடினார்.என்ன மாயம்?! வீட்டைக் காணவில்லை.உண்மைதான்!அவரதுவீடு இப்போது பெரும் மாளிகையாக அல்லவா மாறி இருக்கிறது.அப்போது ஒரு மாளிகையில் இருந்து கலயனாரின் குழந்தையும் மனைவியும் “இங்கே நம் வீட்டுக்குள் வாருங்கள்” என்று அழைத்தனர்.அதிர்ந்துவிட்டார் கலயனார்.
ஆம்!அவரது வீடு இருந்த இடத்தில பெரும் மாளிகை இருந்தது.அதனுள் இருந்துதான் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை அழைத்தனர்.வியந்தவாறே வீட்டிற்குள் சென்று குழந்தைகளையும்,மனைவியையும் அணைத்துக் கொண்ட கலயனாரிடம் நடந்தவை அனைத்தையும் தெரிவித்தார் அவரது மனைவி.ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்ற கலயனார் கடவூர் ஈசனைத் தொழுது,மீண்டும் கடவூர் ஈசனுக்கும்,அன்னை அபிராமிக்கும் குங்குலிய தூபத் திருப்பணி செய்திட வேண்டி ஆலயத்தைநோக்கி நடக்கலானார்.
திருக்கடையூர் சிவாலயத்தில் ஈசனுக்கும்,அம்பிகைக்கும் இப்படி குங்குலிய தூபம் இடும் திருப்பணி தமது வறுமை நிலையிலும் செய்து ,ஈசன் அருட்திறத்தால் வாழ்வில் கலயனார் உயர்ந்ததால் கலயனாரை குங்கிலிய கலயனார் என அழைத்தனர்.இப்படியே பலகாலம் அவரது தூபத் திருப்பணி தொடர்ந்தது.ஒருநாள் கலயனாரை திருக்கடையூரில் சந்தித்த அன்பர் ஒருவர் திருப்பனந்தாள் பெரியநாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் ஆலயத்தில் கருவறை சிவலிங்கம் சாய்ந்து உள்ளது என்றும்,அதனை யாராலும்,மன்னரின் படைகளாலும் கூட நிமிர்த்த முடியவில்லை என்றும் கூறினார்.
உடனே ஈசனின் சித்தம் எனக்கருதி திருப்பனந்தாள் நோக்கி பயணமானார் கலயனார்.ஒருமுறை தாடகை எனும் பெண்,புத்திரப் பாக்கியம் வேண்டி திருப்பனந்தாள் ஈசனை தினமும் மாலை சூட்டி வழிபட்டு வந்தாள்.ஒருநாள் சிவலிங்கத்துக்கு மாலை சாத்தும்போது, எதிர்பாராத விதமாக தாடகையின் இடுப்பில் இருந்து சேலை நழுவியது.அதனை இரு கைகளாலும் பற்றிக்கொண்டே, சிவலிங்கத்துக்கு மாலை அணிவிக்க முயன்றாள்.முடியவில்லை.இதனால் தாடகை பெரும் வருத்தம் கொண்டாள்.அவளுக்காக இரங்கிய ஈசன்,தனது சிவலிங்கத் திருமேனியை சிறிது சாய்த்து அவளது மாலையை ஏற்றுக்கொண்டார். ,அன்றுமுதல் திருப்பனந்தாளில் சிவலிங்கம் சாய்ந்தே இருந்தது.
ஒரு நாள் இங்கு வழிபட வந்த சோழ மன்னன், சிவலிங்கம் சாய்ந்திருப்பதைக் கண்டு அதனை நிமிர்த்த முயன்றான்.தனது படை வீரர்களையும்,யானை,குதிரை முதலியவற்றையும் கொண்டு சாய்ந்திருந்த சிவலிங்கத்தைக் கட்டி இழுத்துப் பார்த்தும்,அது சற்று கூட அசைந்து கொடுக்கவில்லை.இந்த நிலையில் குங்குலியக் கலயனார் திருப்பனந்தாள் வந்து சேர்ந்தார்.சாய்ந்திருந்த ஈசனைக் கண்ட குங்குலியக் கலயனார்,சாய்ந்திருந்த சிவலிங்கத்தை தனது கழுத்தில் ஒரு சுருக்குக் கயிற்றை கட்டிக் கொண்டு,அந்த கயிற்றின் மறு முனையில் சிவலிங்கத்தைக் கட்டி நிமிர்த்த முயன்றார்.
முதலில் சிவலிங்கம் நிமிரவில்லை.அதனால் குங்குலியக் கலயனாரின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுருக்கு இறுகிக் கொண்டே வந்தது.சிவலிங்கம் நிமிரவில்லை என்றால்,கயிறு இறுகி,கலயனார் உயிர் துறப்பது நிச்சயம் என்ற நிலை வந்து விட்டது.‘சிவாய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே மீண்டும் சிவலிங்கத்தை கயிற்றால் கட்டி இழுத்தார்.என்ன ஆச்சரியம்!அதுவரை நிமிராத சிவலிங்கம்,நிமிர்ந்தது.ஆம்!அன்று பக்தைக்காக சாய்ந்த சிவலிங்கம்,இன்று தம் பக்தன் கலயனுக்காக மீண்டும் நிமிர்ந்தது.பின்பு சிறிதுகாலம் அங்கும் ஈசனுக்கு குங்குலியத் திருப்பணியை தொடர்ந்த கலயனார் மீண்டும் திருக்கடையூருக்கு வந்தார்.தினமும் முன்புபோலவே தமது குங்குலியத் தூப திருப்பணியை அமிர்தகடேஸ்வரருக்கும்,அபிராமி அம்மனுக்கும் செய்துவந்தார் கலயனார்.
அந்த சமயத்தில் ஒருநாள் திருக்கடையூருக்கு சம்பந்தரும்,அப்பரும் வருகை புரிந்தனர்.அவர்களை வரவேற்று திருக்கடையூர் ஆலயத்துக்கு அழைத்துச்சென்று தம் தூப திருப்பணியை தொடர்ந்து செய்து முக்திபெற்று,பின்னாளில் திருவாரூர் ஈசன் அருளால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத்தொகையில் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரானார் குங்குலியக் கலய நாயனார்.ஆண்டுதோறும் திருக்கடையூர் திருத்தலத்தில் ஆவணிமாதம் மூலம் நட்சத்திர நன்னாளில் குங்குலியக் கலய நாயனார் குருபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அட்டவீரட்ட தலங்களில் திருக்கடையூர், மார்கண்டேயனுக்காக எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த ஈசன் அருள்பாலிக்கும் திருத்தலமாகும்.இங்கு காலனை சம்காரம் செய்த காலசம்கார மூர்த்தியும்,அவரது உடனுறை சக்தியாக பாலாம்பிகை அம்மனும் தனிச்சன்னதியில் அருள்கிறார்கள்.இத்தல ஈசனை வழிப்படுவோருக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும்.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் இங்கு ஈசனை வழிபட்டு ஆயுள் விருத்தி பெறுகிறார்கள்.மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்றத் தலம் இது என்பதால் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்,ஆயுள் ஹோமம் போன்றவை அனுதினமும் இங்கு நடைபெறுகிறது.இத்திருத்தலத்தில் கருவறையில் பசுநெய் சேர்த்து,குங்குலிய தூபமிட்டு வழிபடுவது வாழ்வில் வறுமை,தரித்திரங்களை அகற்றும் என்கிறார்கள்.தம் பக்தன் அபிராமிபட்டரின் சொல்லினை மெய்ப்பிக்க ,தை மாத அமாவாசை தினத்தில் வானில் பௌர்ணமி நிலவை வரவைத்து அதிஅற்புதம் நிகழ்த்திய அன்னை அபிராமி அருளும் பெரும் பவித்திரமான திருத்தலமும் இதுவேயாம்.அபிராமிபட்டரின் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து இத்தல அம்பிகையை நாளும் வழிபட்டால்,நாளும் கோளும் நம்மை அண்டாமல்,பதினாறுவகை பேறுகளையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.அபிராமி அம்மனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்ற அபிராமிபட்டரும் தமது அபிராமி அம்மை பதிகத்தில் ”தொண்டர் போற்றக் கலயனும் போற்ற மெய்ச் சுருதி போற்று அச்சுதன் போற்ற வாசவன் அண்டர் போற்றும் கடவூர் இறைவரை ஆளும் செல்வி! அபிராம வல்லியே!”என்று குங்கிலியக்கலயனாரை தமது பதிகத்தில் பதிந்துள்ளார் என்பது போற்றத்தக்கது.விநாயகரின் அறுபடை வீடுகளில் ஒன்றான இத்தலத்தில்தான் கள்ள வாரண பிள்ளையார் அருள்பாலிக்கிறார்.இவரைப் போற்றி ”கள்ள விநாயகர் பதிகம்”பாடியுள்ளார் அபிராமிபட்டர்.”திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை”என்பார்கள்.அதற்கு சாட்சியாய் சுழலும் தெய்வங்கள் அருளும் திருக்கடையூர் திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும்,சீர்காழியில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலும்,காரைக்காலில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
