இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள நிலையில்,அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அவரை விடுவிக்க பாகிஸ்தானை வலியுறுத்த உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவ் என்ற இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அவர் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் ராணுவம் அண்டை நாட்டில் கைது செய்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றதாக இந்தியா மறுப்புத் தெரிவித்தது.
இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்திருந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்தியாவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, குல்பூஷண் ஜாதவை சந்திக்க ஒரு வழக்கறிஞரை கூட பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை என்றும் குல்பூஷண் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும் வாதாடினார்.
இருநாடுகளுக்கு இடையிலான போர்க் கைதிகளை நடத்தும் விதம் தொடர்பான வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குல்பூஷண் ஜாதவ் இந்தியர்தான் என்பதை நிரூபிக்கவில்லை என்ற பாகிஸ்தானின் வறட்டுத்தனமான வாதத்தையும் அவர் முறியடித்தார்.
சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள 15 நாடுகளின் நீதிபதிகளில் இந்தியாவுக்கு ஆதரவாக 14 நாடுகளின் நீதிபதிகள் வாக்களிக்க பாகிஸ்தானுக்கு ஒரு அதன் சொந்த நீதிபதியின் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது.
இந்த தீர்ப்பில் குல்பூஷண் ஜாதவ் மீதான மரண தண்டனை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் குல்பூஷண் யாதவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இவ்வழக்கை நியாயமான முறையில் மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சட்டரீதியான உரிமையை பாகிஸ்தான் மறுத்துள்ளதாகவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்புக்குப் பின் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இத்தீர்ப்பை பாகிஸ்தான் மதித்து நடந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சர்வதேச அளவில் இந்த வழக்கால் பாகிஸ்தான் பெரும் தலைகுனிவை சந்தித்துள்ளது. தீர்ப்பையடுத்து ஜாதவை விடுவிக்கக் கோரி இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, நீதி வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார். ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியர்களை பாதுகாக்க தமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இதனிடையே குல்பூஷண் ஜாதவ் வழக்கு தொடர்பான விவரங்களை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரின் குடும்பத்தினரை சந்தித்தும் வழக்கின் விவரங்களை தெரிவித்துள்ளார்.
