காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு கடந்த 5 ஆம் தேதி நீக்கப்பட்டது. முன்எச்சரிக்கையாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பு சேவை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, வீட்டு சிறையில் உள்ள கட்சி நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான முகம்மது யூசுப் டரிகாமியை சந்திப்பதற்காக காஷ்மீர் செல்ல அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் வேறு ஏதேனும் அரசியல் நடவடிக்கையில் அவர் அங்கு ஈடுபட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். நாட்டின் எந்த பகுதிகளுக்கும் செல்வதற்கு குடிமகனான யெச்சூரிக்கு உரிமை இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்டர்நெட் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிடக் கோரி காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசின் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 7 நாட்களுக்குள் மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விளக்கம் அளிப்பதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அப்போது இந்த விவகாரத்தில் நோட்டீஸ் எதுவும் அனுப்ப தேவையில்லை என்று அட்டார்னி ஜெனரல் கேகே. வேணுகோபால் மற்றும் சொலிசிடர் ஜெனரல் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றும், எதையும் தாங்கள் மாற்றப் போவது இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
